அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் : வெங்கையா நாயுடு பேச்சு..!

அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக கட்சி தாவலில் ஈடுபடுகிறார்கள். இந்த போக்கு நாட்டுக்கு நல்லதல்ல.

Update: 2024-10-05 10:00 GMT

வெங்கையா முன்னாள் துணை குடியரசுத் தலைவர் நாயுடு பேசியபோது 

கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,

மருத்துவ துறை நாட்டில் மிக முக்கிய துறையாக பார்க்கப்படுகன்றது. மருத்துவத் துறையில் இருப்பவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட வேண்டும். மருத்துவத் துறையில் ஆதாயம் தேடாமல் ஆத்மார்த்தமாக அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில் நுட்பம் மருத்துவ துறையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி உள்ளது.

நவீன மருத்துவ தொழில் நுட்பம் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும் எனவும், மருத்துவம் பார்க்க வரும் மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவதற்கான கட்டணத்தில் மருத்துவ துறை செயல்பட வேண்டும் என்பது இன்றியமையாததாக பார்க்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் இந்தியாவில் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் 27 சதவிகிதம் இதய நோயாக இருக்கிறது.

இதை தவிர்க்க அதிகப்படியான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக மாற்றம், மன அழுத்தம் போன்றவையும் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது எனவும் இளைஞர்கள் முந்தைய தலைமுறையின் வாழ்க்கை நடைமுறைகளை பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர் மேற்கத்திய கலாசார நடைமுறையை பின்பற்றாமல் இந்திய கலாசார வாழ்க்கை பழக்கங்களை பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

இன்றைய சூழலில் செல்போன் நிறைய பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. செல்போனை முறையாக பயன்படுத்த வில்லை என்றால் அது ஆபத்தில் கொண்டுபோய் சேர்க்கும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு குழந்தைகள் அடிமையாக்கும் போது அவர்களின் வாழ்க்கை பாழ் படுகிறது. செல்போன் பழக்கத்திற்கு அடிமையாக்கும் இளைஞர்கள் அவர்களது கற்பனை மற்றும் சுயமாக சிந்திக்கும் திறனை இழக்கிறார்கள். செல்போனை தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன் பயன்பாட்டால் குழந்தைகளின் மன நிலை மாறி உள்ளது எனவும் தெரிவித்தார்.

தற்போது நிலவி வரும் இஸ்ரேல், ஈரான் போரால் தேவையற்ற குழப்பங்களும் பதற்றமும் தெற்காசிய நாடுகளில் உருவாகி உள்ளது. தேவையற்ற பதற்றம் பொருளாதாரத்தை பாழ் படுத்தும். இந்த நிதியாண்டில் நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் 6 கோடி பேருக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

நவீன மருத்துவம் கிராமப்புற பகுதிகளை நோக்கியும் செல்ல வேண்டும். இந்தியா தற்போது முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. சர்வதேச அளவில் தொழில் நிறுவனங்களை இயக்குபவர்களாக இந்தியர்கள் தற்போது இருக்கின்றனர். அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக கட்சி தாவலில் ஈடுபடுகிறார்கள். இந்த போக்கு நாட்டுக்கு நல்லதல்ல. அரசியல் வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணத்துடன் விளங்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News