கோவையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட காவலர் உயிரிழப்பு
கோவையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் காரணமாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட ஆயுதப்படை காவலர் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த காவலர் காளிமுத்துவிற்கு நேற்று மாலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கிட்னி செயலிழந்த அவருக்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவில் காவலர் காளிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காவலர் காளிமுத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததும், அதனால் லட்சக்கணக்கில் நஷ்டமடைந்து பல லட்சம் ரூபாய் கடன் பெற்று சிரமப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள சூழலில் கடன் தொல்லை காரணமாக பள்ளியில் கூட சேர்க்காததால் வீட்டில் பிரச்சினை நிலவி வந்ததும் அதனால் மன விரக்தியில் இருந்த காவலர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் வீட்டிலிருந்து பணிக்கு புறப்பட்டு சென்று 3.15 மணியளவில் பொருட்காட்சி அரங்கில் யாரும் இல்லாத சமயத்தில் தான் வைத்திருந்த எஸ் எல் ஆர் ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அண்மை காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர்கள் பலர் உயிரிழந்து வரும் சூழலில் காவலர் ஒருவரே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவை காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக கோவை பந்தய சாலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்