கோவை ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

PM Modi Coimbatore Road Show சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தூரத்திற்கு நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்

Update: 2024-03-18 14:15 GMT

பிரதமர் நரேந்திர மோடி திறந்த காரில் கோவை மாநகரில் உற்சாகமாக கையை அசைத்து  பொதுமக்களை மகிழ்வித்தார். 

PM Modi Coimbatore Road Show

கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் சாலை மர்க்கமாக பிரதமர் மோடி, சாய்பாபா காலனி பகுதிக்கு சென்றார்.

சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ எனப்படும் வாகன அணிவகுப்பு பேரணி துவங்கியது. சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தூரத்திற்கு நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அவரது வாகனத்தில் உடனிருந்தனர். வழிநெடுக இருபுறமும் திரண்டிருந்த பாஜகவினர், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அப்போது திரண்டிருந்த பொதுமக்களைப் பார்த்து பிரதமர் மோடி கையசைத்தும், வணக்கம் வைத்தும் உற்சாகப்படுத்தினார்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நிறைவடைந்தது. அங்கு கடந்த 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி பந்தய சாலை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார். பின்னர் நாளை காலை கோவை விமான நிலையத்திற்கு கார் மூலம் சாலை மார்க்கமாக செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார். பாலக்காட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடியின் கோவை வருகையை முன்னிட்டு கோவை மாநகர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Tags:    

Similar News