நொய்யல் ஆற்றங்கரையில் பனை விதைகள் நடும் பணி; துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
Coimbatore News- நொய்யல் ஆற்றங்கரையில் பனை விதைகள் நடும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பேரூர் சாலை தெலுங்குபாளையம் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் பனை விதைகள் பதிக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இயற்கை வளங்களையும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. அந்த வகையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க ஆற்று ஓரங்களிலும், குளங்களின் கரையிலும், வாய்க்கால் கரையிலும் குட்டை உள்ள பகுதிகளான காவிரிக் கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்றைய தினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் சார்பில், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட தெலுங்கு பாளையம் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் அளவீடு செய்யப்பட்ட இடங்களில் முதற்கட்டமாக சுமார் 1000 பனை விதைகள் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களிலும் பனை விதைகள் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. முன்னதாக, பனை விதைகள் கோயம்புத்தூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பனை மேம்பாட்டு இயக்கம் 2024-25 மூலமாக பெறப்பட்டது. நிகழ்வில் அரசு பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.