அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை மாநகராட்சி 84வது வார்டு ஜி.எம்.நகர் பகுதியில் சாலை வசதி, சாக்கடை வசதி, தெரிவிளக்கு, மின்கம்ப வசதிகள் ஆகியவை சரிவர இல்லை என கூறி அப்பகுதி மக்கள் பல நாட்களாக அதிகாரிகளிடம் தெரிவித்து வந்துள்ளனர். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபடுவதற்குள் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் தங்கள் பகுதிக்கு வந்து பார்வையிடுமாறு பொதுமக்கள் கேட்டுகொண்டதை தொடர்ந்து, அங்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதிகாரிகளிடம் அப்பகுதி எவ்வாறு உள்ளது என்பதை காண்பித்து உடனடியாக இதனை சரி செய்து தர வேண்டுமென முறையிட்டனர்.
அதிகாரிகள் அனைத்தையும் பார்வையிட்டுவிட்டு சென்ற நிலையில் அப்பகுதி பெண்கள் 84வது வார்டு கவுன்சிலர் அலிமா பேகத்தை சந்தித்து முறையிட சென்றனர். ஆனால் அவர் இல்லாததால் வீட்டின் முன்பு நின்று அவர் உடனடியாக இங்கு வரவேண்டுமென கூறி காத்திருக்க முயன்றனர். பின்னர் அங்கு வந்த போலிசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஒரு வார காலத்திற்குள் தங்கள் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமெனவும் இல்லையென்றால் மாநகராட்சி ஆணையாளரையோ மாவட்ட ஆட்சியரையோ சந்தித்து மனு அளிக்க செல்வோம் என கூறி கலைந்து சென்றனர்.
இதனிடையே கவுன்சிலருக்கு ஆதரவான சிலர் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்று கூறியதால் இத்தனை நாட்களாக எதுவும் செல்லவில்லையே என்று கூறியதால் பொதுமக்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களையும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் கவுன்சிலர் இல்லம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.