சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து விமானத்தில் வந்த 166 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை

Update: 2022-12-29 08:51 GMT

கோவை விமான நிலையம் 

சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமான நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவை சர்வதேச விமானநிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஒரு விமானம் வந்தது.  விமானத்தில் வந்த 167 பயணிகளில் சேலத்தை சேர்ந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்ததில், அவர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்ததும், அவரை போன்று மற்றொருவரும் சீனாவில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சேலத்தை சேர்ந்த பயணிக்கு கொரோனா உறுதியானது. மேலும் இவருக்கு எந்தவகையான கொரோனா என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பாதிப்புக்குள்ளானவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அவருடன் விமானத்தில் கோவை வந்த 166 பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.

அவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களிடம் தனிமைப்படுத்தி கொள்ளவும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News