ஓட்டுநர்கள் மது அருந்தவில்லை என உறுதி செய்த பிறகே ஆம்னி பஸ் இயக்க அனுமதி
பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்தவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மாநகரில் விபத்துகளை தடுக்கும் வகையில் மாநகர காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல் துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “கோவை மாநகரிலிருந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற மாநில தலைநகரங்களுக்கும், தமிழகத்தின் இதர பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்து ஓட்டுனர்கள் மது போதையில் வாகனத்தை இயக்குகிறார்களா என்பதைக் கண்டறிய சோதனை செய்யப்பட்டது.
கோவை மாநகரிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் 95 ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்களை 01.09.2024-ஆம தேதி மாலை முதல் நடைபெற்ற சோதனையில், இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஆம்னி பேருந்தை இயக்கவிருந்தது கண்டறியப்பட்டு, மேற்படி பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு தகவல் அளித்து மாற்று ஓட்டுநர்களை ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்தவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் எச்சரிக்கப்பட்டனர். மேலும், 01.09.2024-ஆம் தேதி இரவு கோவை மாநகர போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை கொண்டு 17 குழுக்களை நியமித்து கோவை மாநகரில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டதில், உயர்தர கார்கள் 5, உயர்தர இருசக்கர வாகனங்கள் 4 உட்பட குடிபோதையில் வாகனங்களை இயக்கிய குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டப்படி 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.