ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் பூக்கும் பிரம்ம கமலம்: கோவையில் அதிசயம்..!
தகவல் அறிந்து அக்கம், பக்கத்தினர் பிரம்ம கமலம் மலரை காண ஆர்வமுடன் வந்து செல்கின்றன.
எபிபைலம் ஆக்ஸிபெட்டலம் எனும் தாவரவியல் பெயர் கொண்ட கள்ளி வகையை சேர்ந்த தாவரம், ‘பிரம்ம கமலம்’ என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவை தாயகமாக கொண்ட இத்தாவரம் இந்தியாவிலும் பரவலாக காணப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும் கொண்ட இத்தாவரத்தின் பூக்களுக்குள், பிரம்மா கடவுள் உறங்குவதைப் போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும், மருத்துவ குணத்தையும் கொண்டதால், பிரம்ம கமலம் மலர்கள் பூக்கள் வரிசையில் முக்கிய இடத்தை பெற்று உள்ளது.
இதன் இலையை வெட்டி வைத்தாலே வளரும் வித்தியாசமான அமைப்பு பெற்று உள்ள பிரம்ம கமலம் மலர்களை சமீப காலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்குமென நம்பப்படுகிறது.
இந்நிலையில் கோவை, துடியலூரில் பகுதியில் உள்ள சரஸ்வதி - சாமிநாதன் தம்பதியினர் வசித்து வரும் வீட்டில் பிரம்ம கமலம் என்ற நிஷா காந்தி பூ நேற்று இரவு பூத்துள்ளது. அதனை அவரது குடும்பத்தினர் கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். தகவல் அறிந்து அக்கம், பக்கத்தினர் பிரம்ம கமலம் மலரை காண ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.