கோவை மாநகராட்சியின் அடுத்த மேயர் யார்? - யாருக்கெல்லாம் வாய்ப்பு?
Coimbatore News- கல்பனா ஆனந்தகுமார் மேயர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து கோவை மாநகராட்சியின் அடுத்த மேயர் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேயராக பொறுப்பேற்றவுடன் திமுக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டது, மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் இணக்கமாக இல்லாமல் மோதல் போக்குடன் செயல்பட்டது, நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் காரணமாக அவரை ராஜினாமா செய்ய கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதனையடுத்து உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
இதனையடுத்து அடுத்த மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோவை மாநகராட்சியின் மத்திய மண்டல தலைவராக உள்ள மீனா லோகு, கிழக்கு மண்டல தலைவராக உள்ள இலக்குமி இளஞ்செல்வி , மேற்கு மண்டல தலைவராக உள்ள தெய்வானை, மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாலதி , கோவை மாநகராட்சி 27 வது வார்டு கவுன்சிலர் அம்பிகா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கபடலாம் என கூறப்படுகின்றது.
மேயர் கல்பனா ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில் வரும் 8 ம் தேதி திங்கட்கிழமை சாதாரண கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா கடிதம் உறுப்பினர்கள் முன்னிலையில் கூட்டத்தில் வைக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளபட்டதாக தீர்மானம் நிறைவேற்றபட்டு நகராட்சி நிர்வாக துறைக்கு அனுப்பபட இருக்கின்றது. பின்னர் அங்கிருந்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பபட்ட பின்னர், மேயர் தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பெரும்பான்மை பலம் இருப்பதால் திமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.