பாமக மாவட்டச் செயலாளரை கொலை செய்ய முயன்றதாக புகார்..!
MYV3ADS நிறுவனத்திற்கு எதிராக, அதன் மோசடிகளை வெளிப்படுத்த துவங்கியதில் இருந்து தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன.;
கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக இருப்பவர் அசோக் ஸ்ரீநிதி. இவர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது கடந்த 30 ம் தேதி அவினாசி சாலையில் துணிக்கடையில் துணி எடுத்து விட்டு வந்த தன்னை இரு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இது குறித்து புகார் அளித்தும் இதுவரை சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவித்தார்.
MYV3ADS நிறுவனத்திற்கு எதிராக, அதன் மோசடிகளை வெளிப்படுத்த துவங்கியதில் இருந்து தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அசோக் ஸ்ரீநிதி தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து தப்பி அருகில் இருந்த கடைக்குள் புகுந்து தப்பியதாகவும் கூறி அன்றைய தினம் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளையும் அசோக் ஸ்ரீ நிதி வெளியிட்டார். இந்த சம்பவம் குறித்து அசோக் ஸ்ரீநிதி கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும், Myv3 ads நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டதால் தன்னை மர்ம நபர்கள் தாக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இருசக்கர வாகனத்தில் வந்து தாக்க முயன்ற நபர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதுடன், தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறி அசோக் ஸ்ரீநிதி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். இது குறித்து பந்தயசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.