மதுரை எய்ம்ஸ் கானல் நீராகவே இருந்து கொண்டு இருக்கிறது : அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

Minister Velu Interview எய்ம்ஸ் கட்டுமான பணிகளை அரசியலுக்காக செய்கின்றனர். அது கானல் நீராகவே இருந்து கொண்டு இருக்கின்றது;

Update: 2024-03-05 14:00 GMT

அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Minister Velu Interview

கோவையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இந்த கலைஞர் நூலகம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ”முதல்வரிடம் மதுரையைப் போல கலைஞர் நூலகம் கோவையில் வேண்டும் என மக்கள் கேட்டு இருக்கின்றனர் என தெரிவித்து இருந்தேன். நிதி நிலை அறிக்கையில் கலைஞர் நூலகம் அறிவியல் மையம் அறிவிக்கப்பட்டது. அந்த நூலகத்தை எந்த இடத்தில் அமைக்கலாம் என அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் 6 ஏக்கர் நிலம் இருக்கின்றது. சிறைச்சாலை பகுதியில் 7 ஏக்கர் இடத்தை ஒதுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு வரைபடத்தையும் முதல்வரிடம் காட்டி, அவர் தேர்வு செய்யும் அந்த இடத்தை எடுப்போம். ரேஸ்கோர்ஸ், சிறைச்சாலை வளாகம் என இரண்டுமே முதல்வருக்கு தெரிந்த இடம். அவர் ஆலோசனை பெற்று இடம் தேர்வு செய்யப்படும். பொதுப்பணித்துறை மீது இருக்கும் நம்பிக்கை காரணமாக 2026 ஜனவரியில் கட்டயாமாக நூலகத்தை திறப்பேன் என முதல்வர் தெரிவித்து இருந்தார். நூலகம் மட்டுமல்ல, அறிவியல் தொடர்பானவையும் இடம் பெற வேண்டும் என சொல்லி இருக்கின்றார். இடம் தேர்வு செய்யப்படுவதற்காக வந்து இருக்கின்றேன். மேற்கு புறவழிச்சாலை பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். கோவையில் எல் அண்ட் டி ஒப்பந்தம் இன்னும் முடியாததால், அதை 4 வழி சாலையாக்க முடியவில்லை. எல் அண்ட் டி நிர்வாகத்திடம் இது குறித்து பேசி வருகின்றோம். அவர்களை 4 வழிச்சாலை போட சொன்னோம். அவர்கள் முடியாது என்று சொல்லி இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றோம்.

உக்கடம் மேம்பாலம் ஒப்பந்ததாரர் மார்ச் 30 தேதிக்குள் பணிகளை முடித்து விடுவதாக சொல்லி இருக்கின்றார். அதிகாரிகளும் முடித்து விடலாம் என்று சொல்லி இருக்கின்றனர். சாலை விரிவாக்க பணிகளின் போது மரத்தை வெட்டுவது தவிர்க்க முடியாது. இந்த ஆண்டு மட்டும் 5 லட்சம் மரங்கள் துறையின் சார்பில் நடப்பட்டுள்ளது. 2024 டிசம்பருக்குள் அவிநாசி சாலையில் பாலம் வேலையை முடித்து தர சொல்லி இருக்கின்றேன்.

எய்ம்ஸ்க்கு இணையாக கிண்டியில்240 கோடியில் மருத்துவமனை கட்டி இருக்கின்றோம். எய்ம்ஸ் மருத்துவமனையில் இல்லாத விஷயங்கள் கிண்டி மருத்துவமனையில் இருக்கின்றது. அறிவித்து 13 மாத காலத்தில் திறத்து இருக்கின்றோம். பெரும் பலம் கொண்ட ஒன்றிய அரசு எய்ம்சை கட்டி இருக்க முடியாதா? இப்போது எய்ம்ஸ் கட்டுமான பணிகளை அரசியலுக்காக செய்கின்றனர். அது கானல் நீராகவே இருந்து கொண்டு இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News