கோவையில் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்தார்.;

Update: 2022-12-25 12:55 GMT

கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

தி.மு.க. தலைவர் மு.க .ஸ்டாலினின் மகனும், தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம்தேதி தமிழக அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும், சிறப்பு திட்டங்கள் அமலாக்க துறையும் வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் வெளி மாவட்ட சுற்றுப்பயணமாக இன்று கோவை வந்தார்.கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுபாதை அமைத்தல் மற்றும் ரூ.65.15 இலட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு துறையில் சாதனை படைத்த  மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ரூ.229.84 கோடி மதிப்பிலான 1,115 முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தார், ரூ. 790.42 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.368.20 கோடி மதிப்பில், 25042 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டச்செயலாக்கம்& ஊரகக் கடன் திட்டங்கள் ஆகிய துறைகளில் கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டத்தை ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார். பணிகளை முறையாகவும் விரைந்தும் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அரசு கூடுதல் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலாளர் டாக்டர் கார்த்திகேயன்,  கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News