தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி
நிலச்சரிவு பாதிக்கும் இடங்களை ஆராய்ந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி கூறினார்.;
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் முத்துசாமி.
கோவையில் யானை தாக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு அமைச்சர் முத்துசாமி நிவாரண தொகை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:-
கோவையில் யானை வழித்தடத்தில் சென்ற பாஸ்கர் என்பவர் யானை தாக்கி காயம் அடைந்து உள்ளதாகவும், கால் இரண்டும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறப்பு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் உத்தரவின் பேரில் அவருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் யானை வழித்தடத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. யானை - மனித மோதல்களை தடுக்க துறை சார்ந்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அதேபோல் வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் கோவை, ஈரோடு பகுதியில் யானை - மனித மோதல்களை தடுக்க வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது. நிலச்சரிவு நடந்த வயநாடு பகுதியில் நிலைமை சரியான பிறகு, இன்னும் 10 நாளில் தமிழகத்திலிருந்து டெக்னிக்கல் துறை சார்ந்த அதிகாரிகள் அங்கு சென்று எதனால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது என்பதை ஆராய இருக்கிறார்கள்.
வயநாடு சம்பவத்தை உதாரணமாக வைத்து கொண்டு யானை வழித்தடங்கள் - நிலச்சரிவு பாதிக்கும் இடங்களை ஆராய்ந்து தமிழகத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமலும், மக்களை பாதுகாக்க இருக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.