கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் முறைகேடா? அமைச்சர் நேரு விளக்கம்
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று, கோவையில் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.59 கோடி மதிப்பில் 9 முடிவுற்ற பணிகள் மற்றும் 49.62 கோடி மதிப்பில் 263 புதிய திட்டங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் ஓராண்டு சாதனை நிகழ்வு புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டனர். நிகழ்வில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கோவையின் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்றாலும் தற்போது 96 மாநகர மன்ற உறுப்பினர்களும் 7 நகராட்சிகளும் திமுக வெற்றி பெற்றுள்ளது. சிறுவாணி நீர் குறித்து கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கோவையில் தண்ணீர் பஞ்சம் இல்லாதபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவையில் 591.44 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தை முதல்வத் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, மாநகராட்சிகளைப் பொருத்தவரை இருபத்தி நான்காயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 591 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒரு வருட காலத்திற்குள் பில்லூர் குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் செய்யப்படாத பணிகள் முடிக்கப்பட்டதாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்/ ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகளில் முறைகேடுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கோவை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.