எஸ்பிஐ வங்கியை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்
Marxist Party Agitaition தேர்தல் பத்திர நிதி வாங்கியோர் விவரத்தை உடனே வெளியிடக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
Marxist Party Agitaition
தேர்தல் பத்திர முறை செல்லாது என உச்சநீதிமன்றம் ஒருமித்த கருத்தாக கடந்த மாதம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், ”பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை வழங்கிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் வாங்கியது தொடர்பான அனைத்து விபரங்களையும் மார்ச் 6 ஆம்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 13ஆம் தேதிக்குள் இதுதொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் குறித்த விபரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மேலும், மோடி அரசின் தேர்தல் பத்திர ஊழலுக்கு துணை போகும் எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்து நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்.பி.ஐ தலைமை வங்கி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மோடி அரசின் தேர்தல் பத்திர ஊழலுக்கு துணை போகும் எஸ்.பி.ஐ வங்கியை கண்டித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பத்திர நிதி வாங்கியோர் விவரத்தை உடனே வெளியிடக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.