ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் குவிந்த மலையாளிகள்
கோவில் வளாகத்தில் கொடிக் கம்பத்தின் கீழே அத்திப் பூ கோலம் போடப்பட்டு, ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கேரளாவில் அறுவடைக் காலம் மற்றும் பருவ மழையின் முடிவைக் குறிக்கும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புராணங்களின் படி, மன்னன் மகாபலி திரும்பி வந்ததற்கும் ஓணம் காரணம் என்று கூறப்படுகின்றது.
இந்த திருவிழா 10 நாட்கள் நீடிக்கும். ஒவ்வொரு நாளும் அதன் முக்கியத்துவத்தையும் சடங்குகளையும் மற்றும் கலாச்சார பாரம்பரியம், மத உணர்வு மற்றும் இயற்கையுடனான ஆழமான தொடர்பின் அற்புதமான காட்சிகளாகும். ஓணம் அத்தத்தில் தொடங்கி சித்திரை, சோதி, விசாகம், அனிசம், திருக்கேட, மூலம், பூராடம், உத்திரம், திருவோணம் என்று கடைசி நாள் வரை தொடர்கிறது. திருவிழாவின் இறுதி நாளான திருவோணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்தப் பூ கோலம் போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
ஓணம் பண்டிகை கொண்டாடும் விதமாக கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான மலையாள மக்கள் குடும்பத்தாருடன் வந்து சாமி தரிசனம் செய்து ஓணம் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். மலையாள மக்களின் பாரம்பரிய உடையில் கோவிலுக்கு வருகை தந்தனர். மேலும் கோவில் வளாகத்தில் கொடிக் கம்பத்தின் கீழே அத்தப் பூ கோலம் போடப்பட்டு அதனை பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் மலையாள மக்கள் தங்கள் வீடுகளிலும் அத்தப் பூ கோலமிட்டும் சாமி தரிசனம் செய்து பின்னர் கோவையில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல ஓணம் பண்டிகை ஒட்டி ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நாளில் பிறந்து சில மாதங்களான குழந்தைகளுக்கு இன்று முதல் நாளாக சோறு ஊட்டுவது ஐதீகம். இதனால் அங்கு குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்வும் நடைபெற்றது.