மருதமலை மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்
மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பக்தர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதையொட்டிய வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்கள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதிகளில் உள்ள யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன.
தற்போது கோடை காலம் நெருங்கும் நிலையில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கோவை மருதமலை கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பக்தர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முருகப் பெருமானின் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். வனப்பகுதியை ஒட்டி மருதமலை கோவில் அமைந்திருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் கோவில் படிக்கட்டுகள் மற்றும் மலைப்பாதை வழியாக கடந்து செல்வது வழக்கம். எனவே கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி மலை அடிவாரம் படிக்கட்டுகள் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மருதமலை கோவில் வளாகம் அருகே ஒரு சிறுத்தை சாலை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக சென்ற பக்தர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மருதமலையில் இரவு பக்தர் ஒருவர் காரில் செல்லும் போது மலை பாதையில் முதல் வளைவில் சிறுத்தை ஓடியது. இதனை அவர் படம் பிடித்து வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மருதமலை கோவிலில் மீண்டும் சிறுத்தை தென்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.