பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இடதுசாரி கட்சிகள் மறியல் போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி, தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Update: 2024-08-01 08:15 GMT

கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல் போராட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்க அமைப்பினர் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் அரசியல் தலைமக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் 600 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது சாலையில் அமர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ”ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்ற வருகிறது. கேரளா வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் ஆறுதல் களை தெரிவித்துக் கொள்வதோடு, எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் கேரள மக்களுக்கு செய்வோம். இந்த நிதிநிலை அறிக்கை என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கான அறிக்கை அல்ல, ஆண்டு பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுடைய தேவைகளை அறிந்து பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக மோடி அரசு தங்களுடைய ஆட்சி மற்றும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாடு மற்றும் கேரள உள்ளிட்ட பல மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் பீகார் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கி உள்ளனர்.

இவர்கள் ஆதரிக்கும் காரணத்தினால் மட்டும் அதிக நிதியை ஒதுக்கி உள்ளனர். ஜிஎஸ்டி உள்ளிட்ட ஏராளமான வரியை செலுத்தி கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. எந்த பட்ஜெட்டிலும் இப்படி ஒரு மாநிலம் புறக்கணிக்கப்பட்டது கிடையாது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருளுக்கு விலை நிர்ணய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி குறித்து இந்த பட்ஜெட்டில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அதானி அம்பானி குடும்பங்கள் மேலும் மேலும் வளர்வதற்குரிய இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.இந்த பட்ஜெட்டை வன்மையாக கண்டிக்கின்றோம். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிரான பட்ஜெட் இது என தெரிவித்தார்.‌ 

Tags:    

Similar News