தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் புதிய தொழில் நுட்ப படிப்புகள் அறிமுகம்
புதிய தொழில் நுட்ப பாடங்கள் குறித்து பட்டைய படிப்புகளுக்கான அறிக்கையை துணைவேந்தர் முனைவர் கீதா லட்சுமி வெளியிட்டார்.;
புதிய படிப்புகளை அறிமுகப்படுத்திய துணைவேந்தர் கீதாலட்சுமி.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.
வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு உள்ள உழவர்கள், மகளிர்கள், இளைஞர்கள், பள்ளிப் படிப்பை தொடர இயலாதவர்கள், சுயதொழில் முனைவோர்கள், கிராமங்களில் சிறுதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவர்கள் ஆகியோர் தங்களின் தொழில் நுட்ப அறிவையும் அனுபவங்களையும் வளர்த்துக் கொள்ளும் வண்ணம் இவ்வியக்ககத்தின் வாயிலாக பல சான்றிதழ் பாடங்கள், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு மற்றும் இதர பட்டயப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட குடில்களில் தோட்டக் கலை செடிகள் வளர்ப்புத் தொழில் நுட்பங்கள் (Protected Cultivation), ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) முறையில் தோட்டக் கலைப் பயிர்களின் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணைய வழி தொழில் நுட்பங்கள் (Smart Farming) மற்றும் வேளாண்மையில் ஆளில்லா வான்கலம் தொழில் நுட்பங்கள் (Drone Technology) போன்ற புதிய பட்டயப் படிப்பு பாடங்கள் நடத்தப்பட உள்ளன.
திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற மக்களுக்கான சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்குகிறது. தொலை தூரக் கல்வியை விரும்பும் நகர்புற வாசிகள் மற்றும் நகரங்களின் வரையறுக்கப்பட்ட நிலப் பகுதிகளில் நிலம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, பொது இடங்கள், சுகாதாரம், காற்று மற்றும் நீர் தரம் போன்றவற்றை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் சுய வேலை வாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க ஆர்வமுள்ள நகர்ப் புறவாசிகளுக்காக இந்தப் பாடங்கள் துவங்கப்பட்டு உள்ளன.
இதில் அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்புத் தொழில்நுட்பங்கள், மாடி மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் இந்த ஆண்டு துவங்கப்பட உள்ளன. கோவை வடவள்ளியில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் புதிய தொழில் நுட்ப பாடங்கள் குறித்து பட்டைய படிப்புகளுக்கான அறிக்கையை துணைவேந்தர் முனைவர் கீதா லட்சுமி வெளியிட்டார்.