மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

பன் மாலை அணிந்தும், கிரீம் பன்னை கையில் ஏந்தியபடியும் நிர்மலா சீத்தாராமனை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-09-16 14:15 GMT

இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார். இந்த வீடியோ காட்சிகள் பா.ஜ.கவினரால் வெளியிடப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்தும், இதற்கு காரணமான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோவை சிவானந்தா காலனியில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மக்களவை உறுப்பினர் ராஜ்குமார், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் , தபெதிக பொது செயலாளர் கு.ராதாகிருஷ்ணன் மற்றும் சிபிஐ, சிபிஎம், வி.சி.க உட்பட இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பன் மாலை அணிந்தும், கிரீம் பன்னை கையில் ஏந்தியபடியும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News