கோவை அரசு மருத்துவமனையில் திரியும் நாய்கள்: நோயாளிகள் அச்சம்

கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சுற்றித் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

Update: 2024-06-29 09:15 GMT

கோவை அரசு மருத்துவமனையில் சுற்றும் நாய்கள்

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனைக்கும் தினமும் உள்நோயாளிகள் - புறநோயாளிகள் என பல ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்த மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்பதால், இதயம், சிறுநீரகம், மகப்பேறு, பெண்கள் நலன், எலும்பு முறிவு, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலன் என பல்வேறு துறைகளில் நவீன சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்திற்குள் சுற்றித் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. சில சமயங்களில் நாய்கள் நோயாளிகளை கடிக்க செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதனால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் நோயாளி ஒருவர் சென்று கொண்டு இருந்த போது, ஒரு நாய் அவரை கடிக்கப் போவது போன்று பயத்தை ஏற்படுத்தும் வகையில் குலைத்துக் கொண்டு மற்ற நாய்களுடன் சென்றது. அதனை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியை நாய் தாக்கியதாக பதிவு செய்து உள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடலில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை நாய்கள் தாக்கி மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை இருப்பதாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு சுற்றித் திரியும் தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News