நான் மேயராக இருந்ததால் மக்களின் தேவைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வேன் : கணபதி ராஜ்குமார்
Coimbatore News- வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வரவேற்பு அளித்தனர்.
Coimbatore News, Coimbatore News Today- இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் டெக்ஸ்டூல் பாலம், ரத்தினபுரி, கண்ணப்பநகர், சங்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குசேகரித்தார். அப்போது, வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு இந்து குருமார்களுக்கு திமுக செய்த திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கிய வேட்பாளர், திமுக ஆட்சியில் ஏராளமான கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டதையும், கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று வருவதையும் எடுத்து கூறினார்.
தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின்போது, அவர் பேசுகையில், “நான் உள்ளூரை சேர்ந்தவன் மக்கள் பிரச்சினைகளுக்காக எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை நீங்கள் சந்திக்கலாம், ஆனால், எனக்கு எதிராக போட்டியிடும் பாஜகவை சேர்ந்த அண்ணாமலையோ வெளியூரை சேர்ந்தவர், அவரை நீங்கள் சந்திக்க முடியாது. நான் மேயராக இருந்தவன், இங்குள்ள, மக்களின் தேவைகளை கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்வேன், உங்கள் கோரிக்கைகள் டெல்லியில் ஒளிக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள், தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செய்துள்ளது. சொல்லும் திட்டங்கள் மட்டும் அல்ல, சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றிய அரசு திமுக அரசு. பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை அளித்துள்ளது. திமுக வேட்பாளரான என்னை வெற்றி பெற செய்வதன் மூலம், ஒன்றிய அரசின் திட்டங்களை இங்கு கொண்டு வருவேன், இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் பாசிச பாஜகவை வெல்ல வேண்டும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது, நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என கூறினார்.
முன்னதாக பேசிய மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், “இங்கு மும்முனை போட்டி நடைபெற்று வருகின்றது. அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிய திமுகவின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார், மற்றவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும், கடந்த 10 ஆண்டுகால பாஜக அரசில் கோவைக்கு எவ்வித திட்டங்களையும் செய்யாத பாஜகவை சேர்ந்தவர், இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில், தொழில்துறையில் வளர்ச்சி அடைந்த கோவையில் 15 சதவீத ஜிஎஸ்டி மூலம் தொழிற்சாலைகளை முடங்கி, தொழிற்துறையை நாசக்கேடாக்கியவர்கள் தான் பாஜகவினர். இந்த தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்டி மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால், நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறினார்.