சூலூர் அருகே வடமாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் பறிப்பு
சூலூர் அருகே வடமாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் பறித்த நாள்கு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்;
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் கணியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பரான பாய்சர் அலியுடன் கணியூர் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த ஒரு கார் இவர்களின் அருகில் வந்ததும் கார் நின்றது. அதில் இருந்து இறங்கிய ஒரு நபர் அப்துல்ரகுமானின் அருகில் சென்றார். அப்போது அவர், நீங்கள் யார் என கேட்க அதற்கு காரில் இருந்து இறங்கிய நபர் எனது பெயர் கலைச்செல்வன். நான் இந்த ஏரியா ரவுடி. நீ வைத்திருக்கும் பணத்தை கொடுத்து விடு என்றார்.
ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த வாலிபர் நீ பணம் தராவிட்டால் காரில் கத்தி வைத்துள்ளேன். அதனை எடுத்து உன்னை குத்தி கொன்று விடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அப்துல்ரகுமான் கையில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை கொடுத்தார். இதையடுத்து அந்த நபர் காரில் ஏறி தப்பி சென்றார்.
இதுகுறித்து அப்துல்ரகுமான் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வடமாநில வாலிபர்களை மிரட்டி பணம் பறித்தது, ஊத்துப்பாளையத்தை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர்களான கலைச்செல்வன், கோகுலகிருஷ்ணன், சரண்குமார், விஜயகுமார் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் மாதப்பூரில் இருந்து கணியூர் செல்லும் சாலையில் செல்வதாக கிடைத்த தகவல் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று, 4 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.