கோவையில் பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
Coimbatore News- உணவு பாதுகாப்பு துறை 73 கடைகளை ஆய்வு செய்ததில், விதிமுறைகளை பின்பற்றாத 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.;
Coimbatore News, Coimbatore News Today- தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 10 குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
கோவை மாநகரில் பல பகுதிகளில் காந்திபுரம், வஉசி பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ்.புரம், பீளமேடு மற்றும் சித்ரா, சிங்காநல்லூர், கணபதி, சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, வடவள்ளி டவுன்ஹால், ராமநாதபுரம், உக்கடம் சுந்தராபுரம், குனியமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் மற்றும் மாவட்டத்தில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், மதுக்கரை, வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளிலும் பானி பூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பானி பூரி தயாரிக்கப்படும் இடங்கள் துரித உணவு விற்பனை செய்யும் தள்ளு வண்டிகள் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 73 கடைகளை ஆய்வு செய்ததில், விதிமுறைகளை பின்பற்றாத 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகிகத்ததற்காக 6 கடைகளுக்கு ரூ.12000 அபராதம் விதிக்கப்பட்டது. 73 சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் 4 தயாரிப்பு இடங்களில் அதிக கலர் சேர்க்கப்பட்ட 65 லிட்டர் பானி பூரி மசாலா, 57 கிலோ தரமற்ற உருளைக் கிழங்கு, 5 கிலோ காளான், 19 கிலோ உருளைக் கிழங்கு மசாலா மற்றும் செய்தி தாள்களை பயன்படுத்தி பறிமாறப்பட்ட பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்கள் மற்றும் அதிக நிறம் சேர்க்கப்பட்ட சிக்கன் 65, காளான் மசாலா போன்ற 15 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதன் மதிப்பு சுமார் ரூ.2 இலட்சத்து 82 ஆயிரம் ஆகும். அதில் நான்கு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பரிசோதனைக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர், மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.