கோவையில் மீண்டும் பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து ; பயணிகள் பத்திரமாக மீட்பு
நேற்றைய தினம் பெய்த கன மழையில் இதே பாலத்தில் தனியார் பேருந்து ஒன்று மாட்டியது குறிப்பிடப்பட்டது.;
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பரவலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை சுமார் 5 மணி அளவில் இருந்து கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.
காந்திபுரம், சித்தாபுதூர், சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இந்நிலையில் சிவானந்த காலனியில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து மாட்டிக் கொண்டது. அதில் பயணித்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரம் கழித்து பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த பேருந்து வெளியே எடுக்கப்பட்டது. நேற்றைய தினம் பெய்த கன மழையில் இதே பாலத்தில் தனியார் பேருந்து ஒன்று மாட்டிக் கொண்டது குறிப்பிடப்பட்டது.