கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த தமிழக அரசின் சாதனைகள், திட்ட விழாக்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

Update: 2024-03-17 00:52 GMT

சுவரோவியங்கள் அழிப்பு

நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது.

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவில் தமிழ்நாடு முழுக்கவும் முதல் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத்தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

கோவை மாநகரில் கட்சிகளின் சார்பில், மேம்பாலங்களில் பக்க வாட்டு சுவற்றில் வரையப்பட்டு இருந்த கட்சியின் சின்னங்கள் மற்றும் வாசகங்களை, அரசுப் பணியாளர்கள் வர்ணம் பூசி அழித்தனர். இதே போல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த தமிழக அரசின் சாதனைகள், திட்ட விழாக்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

மேலும் பேரணி, ஊர்வலம், கூட்டத்தை நடத்த காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். 50,000 ரூபாய்க்கு மேல், தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம், பரிசுப்பொருள் அளிக்கக் கூடாது. வழிபாட்டு இடங்கள், பதற்றமான இடங்கள் & தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கூட்டம் நடத்தக் கூடாது. மதம், மொழி, இனம் சார்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது. என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

அதுமட்டுமின்றி தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் அரசு வாகனங்களில் தேர்தல் அவசரம் என்ற ஸ்டிக்கர் ஒட்டி ஜிபிஎஸ் கருவிகள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags:    

Similar News