பிறவி இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்

திருச்சியில் பிறவியிலேயே இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து கோவை மருத்துவர்கள் காப்பாற்றினார்கள்.

Update: 2024-09-17 11:45 GMT

செய்தியாளர்களின் சந்திப்பில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்.

சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய கோளாறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த கோளாறை செய்வதற்கான உரிய சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் இல்லாத காரணத்தினால் அந்த குழந்தைக்கு கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி திருச்சியில் இருந்து இரண்டரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையின் பசுமை வழித்தட ஒத்துழைப்புடன் அக்குழந்தையை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அக்குழந்தைக்கு எம்மாதிரியான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து, அடுத்த நாள் 5ம் தேதி Open Heart Surgery யை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். தற்போது அந்த குழந்தையின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதால் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது.  செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள், அக்குழந்தைக்கு பிறவி இருதய கோளாறு இருந்ததாகவும், திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை கண்டறிந்த உடனே உரிய நேரத்தில் இங்கு அக்குழந்தையை அனுப்பி வைத்ததால் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்ய முடிந்ததாக தெரிவித்தனர். நூற்றில் ஒரு குழந்தைக்கு இந்த பிறவி இருதய கோளாறு வருவதாகவும், வருடத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் இது போன்ற கோளாறால் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மருத்துவர்கள் மரபணு குறைபாட்டால் இது வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். மேலும் நுரையீரலில் இருந்து வரும் சுத்த ரத்தம் சரியான பகுதிக்கு செல்லாமல் இருந்தால் இது போன்ற பாதிப்புகள் வரக்கூடும் என கூறினர்.

வரும் காலங்களில் இந்த குழந்தைக்கு இருதய செயல்பாடுகள் இயல்பாக இருக்கும் பிற குழந்தைகளை போலவே இயல்பான வாழ்க்கையை இந்த குழந்தையும் வாழும் எனவும் தெரிவித்தனர். இந்த அறுவை சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் இல்லை ஆனால் நல்ல உள்ளங்கள் அதிகமானோர் பணத்தை கொடுத்து உதவியதாக தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தை குணமடையும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை எனவும் நல்ல முறையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் கடவுளுக்கு அடுத்தபடியாக டிரைவர் அண்ணா தான் என டிரைவருக்கும் மருத்துவர்களுக்கும் ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கண்கலங்கிய படி நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்த பொழுது தங்களை சென்னைக்கு தான் பரிந்துரைத்ததாகவும் ஆனால் தங்களுக்கு தெரிந்த ஒரு மருத்துவர் தான் ராமகிருஷ்ணா மருத்துவமனையை பரிந்துரைத்ததாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News