கோவை திமுக, பாஜக வேட்பாளர்கள் ராஜ்குமார்- அண்ணாமலை சொத்து மதிப்பு

கோவை திமுக வேட்பாளர் ராஜ்குமார், பாஜக வேட்பாளர் அண்ணாமலை சொத்து விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2024-03-27 11:53 GMT

பிரச்சாரத்தில் அண்ணாமலை (கோப்பு படம்)

பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது அளித்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த 2022-2023 ம் நிதியாண்டில் 20 இலட்சத்து 51 ஆயிரத்து 740 ரூபாய் வருமானம் வந்துள்ளது. அதே ஆண்டில் அவரது மனைவிக்கு 6 இலட்சத்து 8 ஆயிரத்து 450 ரூபாய் வருமானம் வந்துள்ளது. அண்ணாமலை பெயரில் அசையும் சொத்து 36 இலட்சத்து 4100 ரூபாயும், அசையா சொத்து 1 கோடியே 12 இலட்ச ரூபாயும் உள்ளது. அவரது மனைவி அகிலாவின் பெயரில் 2 கோடியே 3 இலட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் அசையும் சொத்தும், 53 இலட்ச ரூபாய் அசையா சொத்தும் உள்ளது. அண்ணாமலை 5 இலட்ச ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி கார் வைத்துள்ளார்.

அண்ணாமலை மொத்தம் 3 வங்கி கணக்குகள் வைத்துள்ளார். சென்னை மேற்கு மாம்பலம் ஹெச்டிஎப்சி வங்கியில் 25 இலட்சத்து 30 ஆயிரத்து 492 ரூபாய், கரூரில் உள்ள கனரா வங்கியில் 2608 ரூபாய் பணம் வைத்துள்ளார். சென்னை வேளச்சேரி ஹெச்டிஎப்சி வங்கியில் பணம் எதுவும் இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் வைத்துள்ளார். தேர்தலுக்காக இந்த கணக்கை துவங்கிய நிலையில், இந்த கணக்கில் பணம் எதுவும் செலுத்தப்படவில்லை. கையில் ரொக்கமாக 5 இலட்ச ரூபாய் பணம் இவரிடம், இவரது மனைவி அகிலாவிடம் 1 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாயும் உள்ளது. அண்ணாமலைக்கு மொத்தம் 62.73 ஏக்கர் நிலம் உள்ளது. அண்ணாமலை மீது மொத்தம் 24 வழக்குகள் உள்ளன.

இதேபோல திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வேட்பு மனுத்தாக்கலின் போது, அளித்த பிரமாண பத்திரத்தில் சொத்து விபரங்களை தந்துள்ளார். அதன்படி கணபதி ராஜ்குமார் கையிருப்பாக 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், மனைவி 1 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாயும் வைத்துள்ளனர். ராஜ்குமார் பெயரில் 82 இலட்சத்து 5 ஆயிரத்து 132 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் 91 இலட்சத்து 63 ஆயிரத்து 95 ரூபாய் அசையும் சொத்துகளும் உள்ளன. ராஜ்குமார் பெயரில் 44 கோடியே 26 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், மனைவி பெயரில் 3 கோடி ரூபாய் மதிப்பிகான அசையா சொத்துகளும் உள்ளன.

மகன் விகாஷ் பெயரில் 3 கோடியே 41 இலட்சத்து 10 ஆயிரம் அசையா சொத்து உள்ளது. அவரது அம்மா பெயரில் 35 கோடியே 26 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அசையா சொத்து உள்ளது. ராஜ்குமார் பெயரில் 2 கோடியே 79 இலட்சத்து 28 ஆயிரத்து 399 ரூபாய் கடனும், மனைவி பெயரில் 32 இலட்சத்து 31 ஆயிரத்து 446 ரூபாய் கடனும் உள்ளது. மகன் விகாஷ் பெயரில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து 213 ரூபாயும், அவரது அம்மா பெயரில் 15 இலட்ச ரூபாயும் கடன் உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News