28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் திமுக வென்றுள்ளது : அமைச்சர் டிஆர்பி ராஜா
கோவை தொகுதியில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நாப்பதும் நமதே என வெற்றி பெற்றுள்ளோம்.;
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடியிடம் வெற்றி சான்றிதழ்களை பெற்றுக் கொண்டார். அப்போது அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உடன் இருந்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஜி.சி.டி.கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, “கோவை தொகுதியில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நாப்பதும் நமதே என வெற்றி பெற்றுள்ளோம். கோவை மண்ணில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பாராளுமன்ற உறுப்பினரை தந்துள்ளனர். திமுக கோவையை கைப்பற்றியுள்ளது. பாசிசத்துக்கு எதிராக மகத்தான வெற்றியை கண்டுள்ளோம் தொடர்ந்து கோவை மக்களுக்கு அற்புதமான திட்டத்தை தருவோம்.
ஒட்டுமொத்த தாய் குலமும் திமுகவிற்கு வெற்றியை தந்துள்ளனர். நிச்சயமாக அனைத்து வாக்குறுதியும் நிறைவேற்றி தரப்படும். இந்த வெற்றிக்கு கோவை மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெண்களுக்கு கொடுத்துள்ள மகத்தான திட்டத்திற்கு தான் தலைவருக்கு கிடைத்த தொடர் வெற்றி. திமுக தலைவர் நாகரிக அரசியலுக்கு பெயர் போனவர். இந்த மண்ணில் வெறுப்பு அரசியல் இருக்கக் கூடாது இனியாவது அவர்கள் வெறுப்பு அரசியல் இல்லாமல் வளர்ச்சி அரசியலை நோக்கி வருவார்கள் என நம்புகிறோம். விமான நிலைய விரிவாக்க பணியில் ஒட்டுமொத்த நில எடுப்பு பணியை திமுக தான் முடித்துள்ளது.விரைவில் விமான நிலைய விரிவாக்கம் செய்து முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.