கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் மருதமலை முருகன் கோவிலில் வழிபாடு..!

திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அண்ணாமலையை விட 1 இலட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.;

Update: 2024-06-05 07:45 GMT

வழிபாடு செய்த கணபதி ராஜ்குமார்

கோவை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிட்டனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அண்ணாமலையை விட 1 இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனால் கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடியிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவர் பெற்றுக் கொண்டார்.

பின்னர் நேற்றிரவு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அமைச்சர் டிஆர்பி ராஜா உடன் காந்திபுரம் பகுதிக்குச் சென்ற கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார், அண்ணா சிலை மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் இன்று காலை கோவை மருதமலை முருகன் கோவிலுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா உடன் கணபதி ராஜ்குமார் சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் சென்று இருந்தனர். முருகன் கோவிலில் இன்று காலை வழிபாடு நடத்திய கணபதி ராஜ்குமார் அங்கிருந்த பிற சிறு கோவில்களிலும் வழிபாடு நடத்தினார். தேர்தல் பிரசாரத்தை மருதமலை முருகன் கோவிலில் வழிபாடு செய்து துவங்கிய திமுக, வெற்றி பெற்ற பிறகும் அதே கோவிலில் வழிபாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News