போராட்டம் நடத்திய காரமடை நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை

போராட்டம் நடத்திய காரமடை நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் ஒப்பந்ததாரர் பேச்சுவார்த்தை நடத்தினார்.;

Update: 2023-05-12 15:50 GMT

போராட்டம் நடத்திய காரமடை நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் ஒப்பந்ததாரர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளன.இந்த வார்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நகராட்சி சார்பில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 38 பேர் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் தற்காலிக பணியாளர்கள் 137 பேர் என மொத்தமாக 175 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் காரமடை பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் கூடுதலாக தூய்மைப்பணியாளர்கள் நகராட்சிக்காக எடுக்கப்பட்டனர். தற்போது நகராட்சியில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் தொடங்கப்பட்டன. தினசரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிப்பு பணிக்கு செல்லும் முன்னர் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மூலம் வருகை பதிவேடு எடுப்பது வழக்கம். ஆனால் அவர்களின் வருகை பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அவர்கள் நகராட்சி குப்பைக்கிடங்கு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தங்களுக்கு கூலியாக ரூ.606 வழங்க வேண்டும், ஆட்குறைப்பு செய்யக்கூடாது எனவும், தவறும் பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு சுமார் 9 மணி வரை தூய்மை பணியாளர்கள் தங்களுடன் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காரமடை நகர் மன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ், வார்டு உறுப்பினர் குருபிரசாத், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஏற்கனவே பணியில் உள்ள தூய்மைப்பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் நீக்கப்பட மாட்டார்கள் எனவும்,ஒப்பந்ததாரரிடம் செய்யப்பட்ட  ஒப்பந்தப்படி ரூ.557 மட்டுமே கூலியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தாங்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும், தங்களுக்கு அரசு நிர்ணயித்த ரூ.606 சம்பளத்தையே வழங்க வேண்டும் என அந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News