தை அமாவாசை: பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
தை அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் பக்தர்கள் ஆறு, கடல், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதேபோன்று தை அமாவாசையான இன்று புனித தலங்களில் பக்தர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
கோவை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு வெளி மாவட்டம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பேரூர் படித்துறைக்கு திரண்டு வந்து இறந்துபோன தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்ய வந்திருந்தனர்.
அவர்கள் அங்கு தயாராக இருந்த புரோகிதர்களை கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். வாழை இலையில் அரிசி, பூ, தர்ப்பை புல், எள் உள்ளிட்டவற்றை படைத்து புரோகிதர்கள் பூஜை செய்தனர். அவற்றின் முன்பு அமர்ந்து பக்தர்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.
பின்னர் அவற்றை தலையில் சுமந்து சென்று ஆற்று நீரில் போட்டு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் சூரிய பகவானை நோக்கி வழிபட்டனர். அகத்திக்கீரை வாங்கி அந்த பகுதியில் நின்று பசுக்களுக்கு வழங்கியும் மேலும் அன்னதானமும் கொடுத்தனர். பின்னர் ஆற்றங்கரையில் உள்ள விநாயகர் மற்றும் சப்தகன்னியை வணங்கினர்.
இதன்மூலம் இறந்து போன தங்களது முன்னோருடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனை தொடர்ந்து அவர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதன் காரணமாக கோவிலிலும், ஆற்றங்கரையிலும் ஏராளமான பக்தர்களை காண முடிந்தது.
பக்தர்கள் குவிந்ததால் ஆற்றங்கரை மற்றும் கோவில் முன்பு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நூற்றுகணக்கான பக்தர்கள் அங்கு குவிந்ததால் பேரூர் சாலை மற்றும் வேடப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கடும் குளிரின் காரணமாக காலை நேரத்தில் ஆற்றங்கரை பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது.