எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்..!
ரோட்டில் போவோர் ஒருங்கிணைப்பு குழு என்று ஆரம்பித்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா என எடப்பாடி பழனிசாமி கேட்டிருந்தார்.;
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணம் அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பது என கூறப்படும் நிலையில், மீண்டும் அதிமுகவை ஒன்றிணைக்க புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி சசிகலா, தினகரன், ஓ.பிஎஸ், இ.பி.எஸ் என பல அணிகளாக பிரிந்து இருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 14 ம் தேதி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பு குழுவினை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக ரோட்டில் போவோர் ஒருங்கிணைப்பு குழு என்று ஆரம்பித்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? கோவையை சேர்ந்த நபர் ஓ.பி.எஸ். கட்சியில் இருந்த போது கட்சி சேர்க்கப்பட்ட நபர் எனவும், அதற்கு முன் கட்சியிலேயே இல்லாத ஒரு நபர் இந்த குழுவில் உள்ளார் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தன்னை பற்றியும், ஒருங்கிணைப்பு குழுவை பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்த அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கு மனு தாக்கல் செய்தார். இந்த மனு வரும் 26 ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.