ராமர் கோவில் பிரதிஷ்டை: தபால் நிலையத்திற்கு அரை நாள் விடுமுறை
மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு மதியம் முதல் செயல்படும் என அறிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது.
குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் உத்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர். அதேபோல ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு நாளை மத்திய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு அரைநாள் விடுமுறை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு மதியம் 2:30 மணி முதல் செயல்படும் என அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை குட்ஷெட் சாலையில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு நாளை அரை நாள் விடுமுறை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை பிற்பகல் வரை இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.