ஆட்டை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
அண்ணாமலையை இழிவுபடுத்தும் நோக்கில் ஆட்டை வெட்டி பலியாடு என்று கூறி கோஷமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை இழிவுபடுத்தும் நோக்கில் ஆட்டை வெட்டி பலியாடு என்று கூறி கோஷமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க வந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அண்ணாமலை புகைப்படத்தின் கூடிய பதாகைகளை கையில் வைத்துக் கொண்டு முழக்கமிட்டனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை வேட்பாளராக களம் இறங்கினார். அதில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளிடம் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் இதை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஆட்டு குட்டிகளை வைத்து அண்ணாமலையை விமர்சனம் செய்தனர். அதில் கடந்த ஆறாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே நெடுஞ்சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்துடன் இருந்த ஆட்டின் கழுத்தை வெட்டி, அண்ணாமலை ஆடு பலியாடு என்று கோஷமிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இதுகுறித்து அந்த சம்பவத்தில் பங்கு பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தவறான முன்னுதாரணமாக இருக்கும் எனவும், இளைஞர்கள் தவறான வழிக்கு போக வழி வகுக்க உள்ளது என வாயில்லா பிராணியை பொது இடத்தில் வெட்டி கொலை செய்தது போன்றவை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.