தெரு நாடகம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்
Coimbatore News- நாடகம் மூலம் சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்தில் சிக்கியவருக்கு உதவும் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
Coimbatore News, Coimbatore News Today- கோவை சுங்கம் சந்திப்பில் தமிழ்நாடு போக்குவரத்து வார்டன் அமைப்பு மற்றும் நிர்மலா மகளிர் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு சுற்றுக் காவல் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் "நல்ல சமாரிட்டன் திட்டம்" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து பிரிவு கூடுதல் துணை ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். 30 - க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவிகள் தலைக் கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், சாலை விதிகளை மதித்தல் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்தில் சிக்கியவருக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உதவும் நல்ல சமாரிட்டன் திட்டம் குறித்தும் பதாகைகளை ஏந்தியபடி வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், தெரு நாடகம் மற்றும் மாடு ஆட்டம் வாயிலாகவும் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாடு முகமூடி அணிந்து கொண்டு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகளை கண்டு அனைவரும் வியந்தனர். மாணவிகள் மத்தியில் பேசிய போக்குவரத்து பிரிவு கூடுதல் துணை ஆணையர் இரவிச்சந்திரன், "ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக பயணித்தால் மட்டுமே சாலை பாதுகாப்பு என்பது வெற்றியடையும். விபத்தில்லா கோவையை உருவாக்க முடியும்" என்று கூறினார்.
இந்த புதுமையான மற்றும் கவர்ச்சிகரமான விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம், சாலை பாதுகாப்பு மற்றும் நல்ல சமாரிட்டன் திட்டம் குறித்த செய்தியை பொதுமக்களிடம் திறம்பட கொண்டு சேர்க்க மாணவிகள் முயற்சி செய்தனர்.