நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை போக்குவரத்து போலீசார்

கோவை மாநகரில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மாநகர போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Update: 2023-01-27 15:15 GMT

பைல் படம்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஹெல்மெட் அணியாமலும், சீட் பெல்ட் அணியாமலும், செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டிச் செல்வோர், அதிக வேகமாக செல்பவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் என கண்காணித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தற்போது கோவை மாநகர போலீஸ் சார்பில் சாலை போக்குவரத்து வார விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டில் போலீசார் மாநகரில் உள்ள முக்கிய சிக்னல்களில் முகாம் அமைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலமாகவும், போலீசாரும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சாய்பாபா காலனி சிக்னலில் போலீசார் முகாம் அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலும், சீட்பெல்ட் அணியாமலும், சிலர் செல்போனில் பேசியபடியும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றனர்.

இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முகாமுக்குள் அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்களின் ஓட்டுனர் உரிம விபரம் மற்றும் செல்போன் எண்கள் குறித்த தகவலை பெற்றுக்கொண்டனர். பின்னர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க வைத்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News