கோவை செம்மொழிப் பூங்கா பணிகள் மே மாதம் முடிவடையும் - சட்டமன்ற உறுதிமொழி குழு தகவல்
Coimbatore News- கோவை செம்மொழிப் பூங்கா பணிகள் மே மாதம் முடிவடையும் என சட்டமன்ற உறுதிமொழி குழு தெரிவித்தது.;
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கோவை காந்திபுரம் அருகே சிறைச்சாலை வளாகத்தில் நடைபெறும் செம்மொழி பூங்கா பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அதிகாரிகளுடன் உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படுகின்ற மக்கள் நலத்திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளோம். கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பது தொடர்பான உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பூங்கா அமைக்க நடைபெறும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விளக்கம் அளித்து இருக்கின்றனர். மொத்தம் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அங்குள்ள சிறைச்சாலையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்தவுடன் முழுமையாக 165 ஏக்கரில் பணிகள் நடைபெறும். தற்போது முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்காவிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
சிறைசாலையை வேறு பகுதிக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் செம்மொழி பூங்கா பணிகள் 35 சதவீத நடைபெற்று இருக்கிறது. அதிகாரிகள் குழு தொடர்ச்சியாக இந்த பணிகளை ஆய்வு மேற்கொள்ளும். முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் செம்மொழி பூங்கா பணிகள் வரும் மே 25ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து காவலர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணி, அரசு மருத்துவமனையில் நடைபெறும் பணிகள், மேற்கு புறவழிச்சாலை நடைபெறும் பணிகள், பாரதியார் பல்கலை கழகம், மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.