கோவையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்.. நலத்திட்ட உதவிகள் வழங்கல்...
கோவையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். மேலும், குடியரசு தின விழாவின்போது, சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்களும், பல்வேறு துறை சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை 8.05 மணிக்கு மூவர்ண கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியர் சமீரன், மூவர்ண பலூன்களை கொடிமேடை அருகே பறக்க விட்டார்.
தொடர்ந்து, காவல்துறை, தீயணைப்பு துறை, ஆயுதப்படை மற்றும் தேசிய மாணவர் படை, சாரண சாரணியர் இயக்கம் உள்ளிட்டோரின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் சமீரன் ஏற்றுக் கொண்டார். பின்னர், முதல்வரின் பதக்கம் பெற்ற மாநகர காவல் துறையினர் 69 பேருக்கும், மாவட்ட காவல் துறையினர் 43 பேருக்கும் மாவட்ட ஆட்சியர் சமீரன் பதக்கங்களை வழங்கினார்.
மேலும், மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கான நற்சான்றிதழ் மாநகர காவல் துறையினர் 61 பேருக்கும், மாவட்ட காவல் துறையினர் 66 பேருக்கும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கான நற்சான்றிதழ் 136 பேருக்கு ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண்கவரும் வகையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை அனைவரும் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில், அனைத்துத் துறை அலுவலர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.