பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.;
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டு கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி புகைப்படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மாணவி புகார் அளித்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத சின்மயா வித்யாலயா பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.