செட்டாப் பாக்ஸ்களை திரும்பக் கேட்பதை நிறுத்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை

தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்பக் கேட்பதை நிறுத்தக் கோரி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Update: 2022-12-13 05:29 GMT

கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்த தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழக அரசு சார்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டது. அரசு கேபிள் டிவியில் 26 ஆயிரத்து 619 கேபிள் ஆபரேட்டர்கள் பதிவு செய்துள்ளனர். மாவட்டத்துக்கு மூன்று விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டு ஏற்கெனவே தனியாரால் போடப்பட்ட ஓஎஃப்சி கேபிள் மூலம் ஒளிபரப்பு செய்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் ஒளிபரப்பை டிஜிட்டல் முறையில் செட்டாப் பாக்ஸ் வழியாக மட்டுமே மேற்கொள்ளவேண்டும் என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் டிஜிட்டல் முறையில் கேபிள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அனலாக் முறையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் சரியாக ஒளிபரப்பு இல்லாததால் வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கிச் சென்றனர். இதனால் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பாதிக்கப்பட்டனர்.

தனை தொடர்ந்து, கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கும் செட்டாப் பாக்ஸ் வழங்குவது தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கையையடுத்து தமிழக அரசு சார்பில் வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்நிலையில் அனலாக் முறை ஒளிபரப்புக்கு நிலுவை உள்ளதாக கூறி காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மூலம் ஆபரேட்டர்களை அரசு துன்புறுத்தி வருகிறது. நிலுவைத் தொகை வரவில்லை என்றால் ஒளிபரப்பு இணைப்பைத் துண்டிக்காமல் கேபிள் ஆபரேட்டர்கள் சொத்துகளை ஜப்தி செய்து வருகின்றனர். செட்டாப் பாக்ஸ்கள் இலவசம் என்று அறிவித்துவிட்டு தற்போது செயலில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களுக்கு ரூ.1800 வீதம் ஆபரேட்டர்களிடம் வசூலிப்பது நியாயமற்ற செயல்.

எனவே அனாலக் ஒளிபரப்புக்கு நிலுவைத் தொகை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை அரசு கைவிடுவதுடன், இலவச செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதையும் அரசு நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News