கோரிக்கைகளை வலியுறுத்தி தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கத்தினர் முதலமைச்சருக்கு மனு
Coimbatore News- கோவை மாவட்டம் முழுவதும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டத்தை முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Coimbatore News, Coimbatore News Today- ஏஐடியூசி அமைப்பின் கோயம்புத்தூர் மாவட்ட தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பினர்.
இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 2015ஆம் ஆண்டு சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டம் அரசிதழில் வெளியிட்டு அமலுக்கு வந்து விட்ட நிலையில், பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்களால் முறையாக அதனை அமல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டம் முழுவதும் இந்த சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டத்தை முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வியாபார சான்று, ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டைகளை காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் வழங்க வேண்டும் எனவும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வணிகக் குழு தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தெரு வியாபாரிகளிடம் வணிக கட்டணம் வசூலிக்க டெண்டர் விடுவதை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அவர்கள், திட்ட விதிகளில் குறிப்பிட்டுள்ள வணிக கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டுவதாகவும், வணிக குழு கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்பதையும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் தெரு வியாபார பொருட்களை இரவில் பாதுகாப்புடன் வைப்பதற்கான இட வசதியை செய்து தர வேண்டும் எனவும், தங்களது கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.