கோவை வரும் முதல்வருக்கு கருப்பு கொடி: மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அறிவிப்பு

அடுத்த முறை ஸ்டாலின் கோவை வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அறிவித்து உள்ளது.

Update: 2024-08-08 08:15 GMT

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மனு அளிக்க வந்தனர்.

கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் நூறு வார்டுகளின் குப்பைகளும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கு காரணமாக அப்பகுதியினை சுற்றியுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கை தமிழக முதல்வர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவைக்கு வரும் தமிழக முதல்வரை வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு அழைத்து வந்து அங்கு உள்ள பிரச்சனையை அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் இன்று மனு அளித்தனர்.

இது தொடர்பாக பேட்டி அளித்த அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், உக்கடம் பாலம் திறப்பு விழாவிற்கு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளலூர் குப்பை கிடங்கையும் பார்வையிட வேண்டும் எனவும் , அங்குள்ள மக்களிடம் பிரச்சினைகளை கேட்டறிய வேண்டும் எனவும், முதல்வர் நேரில் வந்து பார்வையிட்டால் தான் இந்த பிரச்சினை தீரும் எனவும் தெரிவித்தார்.

கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் கோவை வந்த பொழுது குப்பை கிடங்கை நேரில் பார்வையிட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இந்த முறையும் முதல்வர் குப்பை கிடங்கை பார்வையிட வரவில்லை எனில் அடுத்த முறை தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம் எனவும் ஈஸ்வரன் தெரிவித்தார். பின்னர் நிர்வாகிகளுடன் கோரிக்கை குறித்த மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஈஸ்வரன் வழங்கினார்.

Tags:    

Similar News