கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க நிர்வாகி புகார் மனு
கொலைமிரட்டல் விடுத்த தேவராஜ் என்னும் பெயரில் இயங்கி வரும் நபர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை ஆட்டுக்கு அணிவித்து, அதன் தலையை வெட்டிய விவகாரத்திற்கு , தனது முகநூல் பக்கத்தில் பா.ஜ.க மாநில பொது செயலாளர் கண்டனம் தெரிவித்து இருந்தார். முகநூலில் இதற்கு எதிர்வினையாக தேவராஜ் என்ற முகநூல் ஐ.டியில் இருக்கும் நபர் தகாத வார்த்தையில் திட்டி ,கழுத்தை துண்டாக வெட்டி கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த மிரட்டலை தொடர்ந்து மாநில பொதுசெயலாளர் ஏ.பி.முருகானந்தம் இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் வந்து புகார் அளித்தார். அதில் முகநூல் மூலம் கொலைமிரட்டல் விடுத்த தேவராஜ் என்னும் பெயரில் இயங்கி வரும் நபர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
புகார் மனு அளித்த பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கின்றது. தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு மக்கள் சேவைக்காக பாடுபட்டு கொண்டு இருக்கின்றோம். தேர்தல் காழ்புணர்ச்சி காரணமாக மாநில தலைவர் அண்ணாமலையை கொச்சைப்படுத்தி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றது. நடுரோட்டில் ஆட்டை வைத்து அண்ணாமலை படத்தை போட்டு கிருஷ்ணகிரியில் வெட்டினர். இது மாநில தலைவருக்கு எச்சரிக்கையாக விடும் விதமாக இதை செய்து இருக்கின்றனர். திமுக அரசு இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
யாரையும் கைது செய்யவில்லை. என்னுடைய முகநூல் கணக்கில் எங்களை கண்டம், துண்டமாக வெட்டுவோம் என பதிவிட்டு இருக்கின்றனர். அந் நபர் யார்? அரசியல் காரணங்கள் இருக்கின்றதா? என விசாரிக்க வேண்டும். கிருஷ்ணகிரியில் ஆட்டை வெட்டியது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆட்டை வெட்டும் நபர்கள் அதன் மூலம், அண்ணாமலையை இப்படித்தான் வெட்டுவோம் என சொல்ல வருகின்றனர். தமிழிசை - அமித்ஷா இடையிலான பேச்சு கண்டிப்பு என சொல்ல முடியாது, அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசி இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.