கோவையில் அழியும் நிலையில் சிறு, குறு தொழில்கள் : எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு..!
தி.மு.க அரசு கோவைக்கு எந்த திட்டமும் தரவில்லை.
அ.தி.மு.க உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது குறித்தும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற இருக்கும் மனித சங்கிலி போராட்டம் குறித்தும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி கூறுகையில், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி, கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட மூன்று மாவட்டங்களுடைய பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது என்றார்.
மாவட்டம் முழுவதும் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் 70% பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் முழுமையாக முடிவடையும் என்றும் கூறினார். தி.மு.க அரசு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கூடுதலாக வரி உயர்த்தி இருப்பதாகவும், வரி செலுத்த தாமதமானால் வட்டி வசூலிக்கப்படும் மோசமான சூழலை உருவாக்கி இருப்பதாகவும் கூறிய அவர், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க செய்கிற மக்கள் விரோத ஆட்சியை தொடர்ந்து கண்டித்து வருவதாகவும், விலை உயர்வை தி.மு.க அரசு நிறுத்துகின்ற வகையில் வருகின்ற 8 - ம் தேதி மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறினார்.
வருகின்ற 17ஆம் தேதி அ.தி.மு.க - வின் 53 வது ஆண்டு துவக்க விழாவை கோவையில் உள்ள மூன்று மாவட்டங்கள் சார்பிலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டதாகவும் கூறினார். தி.மு.க அரசு கோவைக்கு எந்த திட்டமும் தரவில்லை என்றும் மக்கள் மிகவும் கடுமையாக அவதியுற்று உள்ளதாகவும் கூறிய அவர், கோவை மாவட்டத்தில் விடுபட்டு உள்ள மற்றும் செய்யாமல் இருக்கும் திட்டங்களை மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்து நிறைவேற்றுவார் என்றும் கூறினார்.
சொத்து வரி, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவைகளால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் 8 - ம் தேதி நடைபெறவிருக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம் என்றும் கூறினார். கோவையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அழிந்து போகும் சூழலில் இருப்பதாகவும் அவற்றைக் காப்பாற்ற மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.