ஆன்லைன் அபராத முறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்
கோவையில், ஆன்லைன் அபராத முறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.;
ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்தக்கோரி, கோவையில் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு சமீபத்தில் போக்குவரத்து சட்டங்களை மறுசீரமைப்பு செய்ததை கண்டித்து, நாடு முழுவதும் தொழிலாளர் நலச்சங்கங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு சிஐடியுவின் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இதன்படி, இன்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது, ஆன்லைன் மூலம் ஆட்டோ ஓட்டுனர்கள் சிறு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டாலும், ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது எனவும் எப்.சி சலானுக்கு 650 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் என 100 மடங்கு கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும் எப்.சி தாமதமானால் 10 நாட்களுக்கு 50 ரூபாய் என இருந்த அபராதத்தை நாளொன்றுக்கு 50 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளதால், ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.