இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட நபர் படுகொலை
கிண்டல் செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதில், வாலிபர்கள் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.;
கோவை காந்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (26). அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். திருமணமான இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், அசோக்குமார் சம்பவத்தன்று இன்ஸ்டாகிராமில் அரிவாள் வைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இவர்களுக்குள் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த வாலிபர்கள் நேற்று அசோக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றவே அவர்களுக்குள் கைகலப்பாக மாறியது. அப்போது வாலிபர்கள் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அசோக்குமார் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சண்முகம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.