அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே வாக்குவாதம் ; போக்குவரத்து பாதிப்பு
Coimbatore News- இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
Coimbatore News, Coimbatore News Today- கோவையில் பல்வேறு இடங்களில் தனியார் பேருந்துகளுக்கும் அரசு பேருந்துகளுக்கும் இடையே நேர கணக்கீடு காரணமாக அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பேருந்தில் பயணிக்கும் பயணிகளும், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த கிணத்துக்கடவு - காந்திபுரம் செல்லும் 33 எண் கொண்ட அரசு பேருந்துக்கும் 1C என்ற தனியார் பேருந்துக்கும் இடையே நேர கணக்கீடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் பேருந்தை சாலையில் நடுவழியிலேயே நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.சிறிது நேரத்தில் அது கைகலப்பு ஆகும் நிலைக்கு சென்றது. பின்னர் அங்கிருந்தவர்கள் மற்றும் பயணிகள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதை அடுத்து பேருந்துகள் புறப்பட்டுள்ளன.
இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ரயில் நிலையம் நோக்கி செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.கோவை நகருக்குள் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது தொடர்கதை ஆகி வரும் நிலையில் போக்குவரத்து காவலர்கள் முக்கியமான இடங்களில் பணியமர்த்தப்பட்டு இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.