அன்னபூர்ணா உரிமையாளரை மிரட்டியது கோவை மக்களை அவமானப்படுத்தியதற்கு சமம் : எம்.பி. கணபதி ராஜ்குமார்
Coimbatore News- அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுகிறது. அவரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானம் படுத்தியதற்கு சமம் என்று எம்பி கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.
Coimbatore News, Coimbatore News Today- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் வருத்தம் தெரிவித்த தனிப்பட்ட வீடியோவை பாஜகவினர் வெளியிட்டது தொடர்பாக கோவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், கொங்கு அழகு தமிழில் கோரிக்கையை பேசினார். பாஜகவினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த நாள் அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறார். அதேபோல், சூலூரில் செல்ஃபோன் உதிரிபாகங்கள் தொடர்பாக இளைஞர் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. கொங்கு மண்டலத்தில் அதிகமான பாதிப்பு ஜி.எஸ்.டினால் தான். யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற தர்பார் ஆட்சி தான் மத்தியில் நடக்கிறது.
பிஸ்கட் 18% தங்கத்திற்கு 3% விதித்த போது அறிந்துகொள்ளலாம் இது யாருக்கான ஆட்சி என தெரிந்து கொள்ளலாம். அந்த வீடியோ அவரது அனுமதி பெற்று வெளியிடப்பட்டதா? அது தனிமனித சட்ட விதிமீறல். அந்த காட்சியை பார்க்கலாம், கற்காலத்திற்கு எடுத்து சென்றது போல் இருந்தது. அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுகிறது. அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானம் படுத்தியதற்கு சமம். ஜி.எஸ்.டி., யால், 30% சிறு குறு தொழிற் கூடங்கள் மூடப்பட்டு விட்டது. பெண்கள் சமூக நீதி பற்றி பேச தகுதி உள்ள கட்சி திமுக. பிரித்தாள்வது தான் இவர்களின் வேலை. மதத்தால், ஜாதியால் பிரித்தவர்கள் தற்போது ஆண், பெண் பற்றி பேசுகிறார்கள்.
தேர்தலின் போது நாங்கள் எதிர்க்கட்சி பற்றி பேசாமல் செய்த சாதனைகள் பற்றி பேசினோம், வெறுப்பரசியல் பேசக்கூடாது என்று முதல்வரின் ஆணைக்கினங்க செயல்பட்டோம். அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டப்பட்டதற்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு திமுக துணை நிற்கும். கொங்கு தமிழில் நன்றாக அனைவரையும் சென்றடையும் வகையில் அன்னபூர்ணா உரிமையாளர் பேசியது சமூக வலைதளத்தில் பரவியதும் காரணம். ஒன்றிய அரசால் தான் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. வீடியோ வெளியிட்டதற்கு தான் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார், அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டப்பட்டதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவில்லை. அனைத்து அரசு விழாக்களிலும், முதல்வர் பங்கேற்ற விழாக்களிலும் முதல் வரிசையில் வானதி சீனிவாசனுக்கு முதல் வரிசையில் இருக்கை கொடுத்தோம்” எனக் கூறினார்.