மிரட்டல்களால் கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு - நடிகர் ரஞ்சித் தகவல்
Coimbatore News- நாளை திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடப்படாது. இந்தப் படம் திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாநகர காவல் ஆணையரிடம் நடிகர் ரஞ்சித் ஒரு புகார் மனு அளித்தார். பின்னர் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”நாளை திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடப்படாது. இந்தப் படம் திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வரையும், செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன். இந்த படம் வெளியிட கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருக்கின்றனர் என தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருக்கிறது. நாடக காதலை பற்றியும், பெற்றோர்களின் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களிலிருந்து எதிர்ப்பு வருகிறது. ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நான் அரசியல்வாதி கிடையாது.
இந்த படத்தின் வெற்றி தான் என்னை எதிர்பவர்களுக்கு நான் சொல்லும் பதில். சென்சர் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை. ஆனால் யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன். இனி நான் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவையும் கடவுள் பார்த்துக் கொள்வார்.
நான் நேர்மையாகவும், உண்மையாகவும் படம் எடுத்துள்ளேன். நான் பொய் சொல்லவில்லை. இந்த படத்தை திரையிட்டால் கலட்டா செய்வோம் என்று பலர் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுகின்றனர். திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம். ஒரு நாடக காதலை பற்றியும், ஒரு நல்ல குடும்பக் கதையையும் நான் திரைப்படமாக எடுத்துள்ளேன். ஆனால் மிரட்டி என்னை போன்ற எளிய கலைஞனை வளரவிடாமல் தடுக்கிறார்கள். இந்த படம் நாளை வெளியிடப்படாது என்பதை வருத்தோடு தெரிவித்து கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.